சபரிமலை அய்யப்பனை தரிசிக்க சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி உயிரிழப்பு
|சிறுமிக்கு மூச்சு திணறல், இருதய பாதிப்பு ஏற்கனவே இருந்தது. அய்யப்பனை தரிசனம் செய்ய அழைத்து வந்தோம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் 14 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருமலை திருப்பதியில் உள்ளது போல வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சரங்குத்தி அருகே இருந்தே வரிசைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்கள் எத்தனை மணிநேரத்தில் தரிசனம் செய்ய முடியும் என்பது உள்ளிட்ட அறிவிப்பு பலகைகளுடன் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சபரிமலைக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற குழுவை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மாஶ்ரீ நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கூறுகையில், பத்மாஶ்ரீக்கு மூச்சு திணறல், இருதய பாதிப்பு ஏற்கனவே இருந்தது. அய்யப்பனை தரிசனம் செய்ய அழைத்து வந்தோம். ஆனால், பத்மாஶ்ரீ உடல்நலம் பாதிக்கப்பட்டு சபரிமலை புனித தலத்திலேயே உயிரிழந்து விட்டார் என கண்ணீர் மல்க கூறினர்.