திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயம்
|ஊத்துக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் உள்ள சிறுணை கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்துக்கு பூப்பறிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை வேனில் ஊருக்கு புறப்பட்டனர். சிறுணை கிராம எல்லையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
வேனில் பயணம் செய்த மல்லிகா (வயது 45), இவரது மகள் கீர்த்தி (9), மகன் அன்பரசன் (5), பவானி (28), ரேகா (19), நந்தினி (29), சுகுணா (32), சித்ரா (29), பவானி (31), அஞ்சலி (17), பிரியங்கா (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.