சென்னை
சென்னையில் ஒரு வாரத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மோசடி பெண்ணுக்கும் சிறை
|சென்னையில் ஒரு வாரத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் குற்றவாளிகளில் ஒரு சிலரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் தள்ள போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீன்ராஜ், சங்கர், கஞ்சா வியாபாரி நந்தா, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளில் சம்பந்தப்பட்ட விக்னேஷ், கரண், வேலை வாங்கி தருவதாக ரூ.68 லட்சம் சுருட்டிய வழக்கில் சிக்கிய மோசடி பெண் நடேஷ்வரி, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட யுவராஜ், நரேஷ், பிரேம்குமார், பணம் பறித்த வழக்கில் கைதான விக்கி, இரு சக்கர வாகன எரிப்பு வழக்கில் பிடிபட்ட கஞ்சா வியாபாரி சேதுராமன் ஆகியோர் இந்த 11 பேர் பட்டியலில் உள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 419 பேர் குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.