தஞ்சாவூர்
காரில் கடத்திய ரூ.11½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
|அணைக்கரையில் காரில் கடத்திய ரூ.11½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பனந்தாள்:
அணைக்கரையில் காரில் கடத்திய ரூ.11½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேகமாக சென்ற கார்
தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கொள்ளிடம் பாலம் ஒரு வழி பாதையாக உள்ளது. தஞ்சை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் பிரதான பகுதியாக உள்ள இப்பகுதியில் போலீசார் தினந்தோறும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சென்னை-கும்பகோணம் சாலை வழியாக ஒரு கார் அதிவேகமாக வாகன சோதனை மையத்தில் நிற்காமல் சென்றது.இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் புகையிலை பொருட்கள்
உடனடியாக போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த காரை, வாகனத்தில் விரட்டி சென்று மறித்தனர். பின்னர் அந்த காரில் சோதனை செய்தனர். அந்த காரில் 25-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 பேரையும் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வான் குமார் (வயது30), மித்தேஷ்(24) என்பதும். இவர்கள் காரில் சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு விற்பனைக்காக 31 மூட்டைகளில் 475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து சர்வான் குமார், மித்தேஷ் ஆகிய 2 பேர் மீதும் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
திருப்பனந்தாள் அருகே அணைக்கரையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.