< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைதொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

மகளிர் உரிமைதொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தினத்தந்தி
|
27 Oct 2023 12:50 AM IST

மகளிர் உரிமை தொகை பெற இதுவரை 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக சாத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவகாசி,

ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து அங்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு மனுக்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதற்காக தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளிடம் இருந்து கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை முதல் கட்டமாகவும், ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் மனுக்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்து சிறப்பு முகாம்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் மூலம் களஆய்வு செய்யப்பட்டன.

வங்கி கணக்கில்....

தகுதி வாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் தகுதி இல்லாதவர்களின் மனுக்களும், சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். வழியாக தெரிவிக்கப்பட்டது.

நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்காக இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பு 24.10.2023 வரை வழங்கப்பட்டது. தற்போது பெறப்பட்டுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேல்முறையீட்டு மனுக்கள்

மாநிலம் முழுவதும் இதுவரை 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த நடவடிக்கை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும். இதில் தகுதியானவர்கள் யாரும் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெறப்பட்டுள்ள மனுக்களின் மீதான கள ஆய்வு முடிந்த பின்னர் புதியதாக மனு செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

எந்த வித வன்முறையாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அரசு சும்மா இருக்காது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்