மயிலாடுதுறை
மரத்தில் மினி பஸ் மோதி 11 பேர் காயம்
|கொள்ளிடம் அருகே மரத்தில் மினி பஸ் மோதி 11 பேர் காயம் அடைந்தனர்.
கொள்ளிடம், அக் 14-
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து கடைக்கண்விநாயக நல்லூர், மாங்கனாம்பட்டு வழியாக சீர்காழிக்கு தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் சீர்காழியில் இருந்து மினி பஸ் புறப்பட்டு கொள்ளிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை பழையபாளையம் கிராமத்தை சேர்ந்த கபிலன் (வயது35) என்பவர் ஓட்டி சென்றார்.கடைக்கண்விநாயகநல்லூர் பகுதியில் வளைவு ஒன்றில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மினி பஸ் மோதியது.இந்த விபத்தில் பஸ் டிரைவர் கபிலன், பயணிகள் கமலி, புனிதவள்ளி, சங்கீதா உள்பட 11 பேர் காயமடைந்தனர்.இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.