திருவள்ளூர்
தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும் என்ற விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
|பூந்தமல்லி அருகே தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும் என்ற விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, நடராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 52). இவரது மகன் சதீஷ்(17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு தேர்வு எழுதி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சதிஷ் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் தற்கொலைக்கு முன்பு சதீஷ் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும் என்ற கவலையில் தனது படிப்பிற்காக மேற்கொண்டு செலவு செய்ய வேண்டாம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.