சென்னை
10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்; தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது
|10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாயின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 38). இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர், திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலமாக 15 வயதில் மகள் இருக்கிறாள். அவர், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதற்கிடையில் மாணவி திடீரென மாயமானார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அந்த வாலிபரின் செல்போனை வைத்து நடத்திய விசாரணையில், மாயமான மாணவி, அந்த வாலிபருடன் அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்று இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களை ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். மாணவியை மன்னார்குடி வரை அழைத்துச்சென்ற வாலிபர், மாணவியிடம் அத்துமீறி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரிடம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் வாலிபரோ மாணவியிடம் தவறாக நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மாணவியிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
மாணவியின் தாயுடன் குடும்பம் நடத்தி வந்த 2-வது கணவரான வினோத், கடந்த 7 ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதனை போலீசாரிடம் கூறிவிட்டு அந்த மாணவி கதறி அழுதார். ஊருக்கு அப்பாவாக பார்க்கப்படும் வினோத், தன்னை தவறான கண்ேணாட்டத்தோடு பார்த்து மிரட்டி, மிரட்டியே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே வீட்டில் இருக்க பிடிக்காமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தான் காதலித்து வந்த வாலிபருடன் சென்றதாகவும் போலீசாரிடம் மாணவி தெரிவித்தார்.
தாயுடன் குடும்பம் நடத்தி கொண்டே மகளாக பார்க்க வேண்டிய மாணவியிடம் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவியின் தாயார், முதல் கணவரை பிரிந்தபோது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதன் பிறகு வினோத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தே அவரை வினோத் 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இப்படி குழந்தையில் இருந்தே மகள் போல் நினைத்து வளர்த்த பிள்ளையைத்தான், சிறுமியான பிறகு வினோத் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் வினோத்தால் தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி மாணவி விரிவாக எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக கைப்பற்றிய போலீசார், வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை அழைத்துக்கொண்டு சென்ற வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர்.