< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு

தினத்தந்தி
|
8 May 2023 10:44 AM IST

ஆவடி அருகே மின்சாரம் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

10-ம் வகுப்பு மாணவர்

ஆவடியை அடுத்த பாலவேடு ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். வெல்டரான இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு அபிநயா (வயது 15) என்ற மகள் உள்ளார். இவர்களுக்கு கோபி(17) என்ற மகனும் இருந்தார். அவர், பாலவேடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவுக்காக காத்திருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

நேற்று காலை குணசேகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் கோபியும், அவருடைய பாட்டி முருகம்மாள் மட்டும் இருந்தனர். வீட்டின் வெளியே உள்ள குளியல் அறையில் குளிக்கச் சென்ற கோபி, சுவரில் இருந்த மின்சார வயரில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவரது பின்னந்தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

நீண்டநேரம் ஆகியும் குளியல் அறையில் இருந்து பேரன் வராததால் முருகம்மாள் அங்கு சென்று பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் கோபி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோபியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்