புதுக்கோட்டை
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|அறந்தாங்கி அருகே காலாண்டு தேர்வு தோல்வி பயத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலாண்டு தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆதித்தன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சுதா (வயது 35). இவர்களுடைய மகன் ஆதி (17). மகள் அனுஸ்ரீ (15). கடந்த ஆண்டு நடைபெற்ற விபத்தில் முருகேசன் இறந்துவிட்டார். இதனால் ஆதி சலூன் கடையை நடத்தி வருகிறார். அனுஸ்ரீ, மேலப்பட்டு அருகே உள்ள பிள்ளைவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் கணித பாடத்தில் அனுஸ்ரீ தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தோல்வி பயத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதையடுத்து, அவரது தாயார், டியூசனுக்கு சென்று படித்து அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என ஆறுதல் கூறியுள்ளார். ஆனால் அனுஸ்ரீ தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என எண்ணி மனவேதனை அடைந்து யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை அனுஸ்ரீ தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி எழுதிய உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காலாண்டு தேர்வில் தோல்வி பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.