நாமக்கல்
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|பெரியமணலியில் 10-ம் வகுப்பு மறுதேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செங்கோடு
10-ம் வகுப்பு மாணவி
எலச்சிபாளையம் அருகே உள்ள பெரியமணலியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சேகர் (வயது 48). இவரது மனைவி வள்ளி (46). கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பெரியமணலி மேற்கு ரத வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீனாட்சி (வயது 17), சுகப்பிரியா (11) என இரு மகள்கள் இருந்தனர். மீனாட்சி பெரியமணலி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். அதில் மீனாட்சி தோல்வி அடைந்து விட்டார்.
தற்கொலை
பின்னர் மறுதேர்வு எழுதி இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மறுதேர்விற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. அதிலும் மீனாட்சி தோல்வி அடைந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் அவரது தாய் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது மீனாட்சி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.