நாளை காலை வெளியாகிறது 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...
|பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.
சென்னை,
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மே 5 முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 பேரும், 12-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 பேரும் எழுதியுள்ளனர்.
மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளன. அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். இதுதவிர மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் மற்றும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
அதே போல், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 9-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்துள்ளது. பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 7-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.