< Back
மாநில செய்திகள்
நடப்பு நிதியாண்டில் ரூ.10,840 கோடி கடன் வழங்க இலக்கு
திருச்சி
மாநில செய்திகள்

நடப்பு நிதியாண்டில் ரூ.10,840 கோடி கடன் வழங்க இலக்கு

தினத்தந்தி
|
26 May 2022 9:52 PM GMT

நடப்பு நிதியாண்டில் ரூ.10,840 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி:

கடன் திட்ட அறிக்கை

திருச்சி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மாவட்டத்தின் வளர்ச்சியை கணக்கிட்டு ஆண்டுதோறும் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்படும். ஒவ்வொரு ஆண்டும், கல்வி, வேளாண்மை, சிறு தொழில், முன்னோடி கடன் திட்டம் என ஒவ்வொரு வகையில், கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வங்கியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான (2022-23) கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலக்கு

தற்போது வெளியிடப்பட்டுள்ள விரிவான கடன் திட்ட அறிக்கையில் நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 839 கோடியே 86 லட்சம் ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், புதிய கடன் திட்டங்கள் உருவாக்கப்படுகிறது.

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு அதிகமாக கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய தவணை கடன்கள், சுய உதவிக்கடன்கள் மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில் கடன்களுக்கு அனைத்து வங்கிகளும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு நிதி உதவி சார்ந்த கடன்களை வங்கிகள் காலவரைக்குள் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேளாண்துறைக்கு அதிக நிதி

விரிவான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி முதன்மை மண்டல மேலாளர் வேலாயுதம் பெற்றுக்கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ்வரன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் குமரன், நபார்டு வங்கி மாவட்ட மேம்பாட்டு மேலாளர் மோகன் கார்த்திக், முன்னோடி வங்கி அதிகாரி முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கடன் திட்ட அறிக்கையில் வேளாண்துறைக்கு 6,068.70 கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,821.45 கோடி, வீட்டுக்கடன் ரூ.1,441.90 கோடி, கல்விக்கடன் ரூ.450.48 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி துறைக்கு ரூ.98.99 கோடி, சமூக உள்கட்டமைப்பு துறைக்கு ரூ.183 கோடி மற்றும் இதர முன்னுரிமை கடன்கள் ரூ.729.35 கோடி என்று ரூ.10,839 கோடியே 86 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்