< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும்108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 48,316 பேர் பயன்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும்108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 48,316 பேர் பயன்

தினத்தந்தி
|
22 Jan 2023 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 48,316 பேர் பயனடைந்துள்ளனா்.


விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறியதாவது:-

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்த ஆண்டு மட்டும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 48 ஆயிரத்து 316 பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் பிரசவ சேவையில் மட்டும் 11 ஆயிரத்து 336 கர்ப்பிணிகள் பயன் அடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் 10 ஆயிரத்து 221 பேர் பயன் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டங்களை பொறுத்தவரை 32 அடிப்படை உயிர்காக்கும் ஆம்புலன்சுகள், 4 அதிநவீன ஆம்புலன்சுகள் மற்றும் 1 அதிநவீன பச்சிளம் குழந்தை பிரத்தியேக ஆம்புலன்ஸ் வாகனம், இவை தவிர 2 இருசக்கர அவசர உதவி வாகனங்களும் என மொத்தம் 39 ஆம்புலன்சுகள் உள்ளன. இதில் 180-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் 108 ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டு இருக்கின்றன. 108 என்று அழைத்தால் சென்னையில் உள்ள கால் சென்டருக்கு சென்று பின்னர் அங்கிருந்து அந்தந்த மாவட்டத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நோயாளி இருக்கும் இடத்திற்கு சராசரியாக 13 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வந்து சேருகிறது. விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவை, அவசர காலங்களில் தாமதமின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை தொடா்ந்து உறுதி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தாா்.

மேலும் செய்திகள்