< Back
மாநில செய்திகள்
ராமசாமி படையாட்சியாரின் 105வது பிறந்த நாள்; தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை
மாநில செய்திகள்

ராமசாமி படையாட்சியாரின் 105வது பிறந்த நாள்; தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை

தினத்தந்தி
|
16 Sep 2022 7:12 AM GMT

ராமசாமி படையாட்சியாரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை:

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாட்சியார், தென்ஆற்காடு மாவட்டம் எனப்படும் தற்போதைய கடலூரில் 1918-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். அவர் கடலூர் தொகுதியிலிருந்து 1952-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் ராமசாமி படையாட்சியார் 1954 முதல் 1957 வரை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் மக்கள்நலப் பணியோடு சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 29.6.2018 அன்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், "சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாட்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்" என்று அறிவித்தார்.

இந்நிலையின் இன்று ராமசாமி படையாட்சியாரின் 105-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவரது உருவசிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சுதந்திர போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்