சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின..!
|கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை,
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.806 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து உள்ளது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கூடுதலாக உபரி நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளது.
மேலும் தொடர் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சென்னை மாவட்டத்தில் 5 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.