< Back
மாநில செய்திகள்
திருத்தணி கோட்டத்தில் சாலை விபத்துகளில் கடந்த ஆண்டில் மட்டும் 103 பேர் உயிரிழப்பு - துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி கோட்டத்தில் சாலை விபத்துகளில் கடந்த ஆண்டில் மட்டும் 103 பேர் உயிரிழப்பு - துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தினத்தந்தி
|
20 March 2023 3:34 PM IST

திருத்தணி கோட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 103 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

திருத்தணி கோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்தில் சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் கூட பொன்பாடி சோதனைச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் திருவள்ளூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இதைத்தொடர்ந்து தொடர் சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருத்தணி அருகே செல்லும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி, தரணிவராகபுரம், ஆற்காடுகுப்பம், கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலை, கூளூர் மற்றும் கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட இடங்களில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் என கண்டறியப்பட்டுள்ளன. இதில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

103 பேர் உயிரிழப்பு

மேலும், அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் இடத்தை கண்டறிந்து, அதில் விபத்தினை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், இரவில் ஒளிரும் வில்லைகள் ஒட்டுதல், விபத்து பகுதி என அடையாளம் குறிக்கும் வகையில் பலகைகள், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை விபத்து குறித்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்ததாவது:-

திருத்தணி கோட்டத்தில் சாலை விபத்தினை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருத்தணி கோட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் பிப்ரவரி வரை மொத்த 287 விபத்துகள் நடைபெற்று உள்ளது. இதில், இருசக்கர வாகனங்கள், கார், பஸ் உள்பட கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த ஓராண்டில் நடைபெற்ற விபத்துகளில் மொத்தம் 251 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள்

திருத்தணி கோட்டத்தில் தற்போது 8 இடங்கள் விபத்துகள் அதிகம் நடைபெறும் என கண்டறியப்பட்டு அதில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 80 சதவீத விபத்துகள் காலை 7-10 மணி வரையிலும், மாலை 6-9 மணி வரையில் நடைபெற்று உள்ளது. திருத்தணி அருகே உள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி காவல்துறை சார்பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த அதிநவீன கேமரா மூலம் சாலைகளில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 80 கிலோமீட்டர், 100 கிலோ மீட்டர் உள்ளிட்டவைகளை தாண்டி மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் கண்டறியப்பட்டு உரிமையாளர்களின் விவரங்களை துல்லியமாக கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்கும்.

இதனை அடுத்து அடுத்த சில நிமிடங்களில் அந்த வாகனம் மடக்கிப்பிடிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்