சேலம்
சேலம் மாவட்டத்தில் இன்று 12 மையங்களில் 10,262 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
|சேலம் மாவட்டத்தில் இன்று 12 மையங்களில் 10 ஆயிரத்து 262 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
12 மையங்கள்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' என்ற நுழைவு தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 பேர் எழுதுகின்றனர்.
நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் மாவட்டத்தில் ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, செந்தில் பப்ளிக் பள்ளி, நோட்டரி டேம் பள்ளி, வித்யா மந்திர் பள்ளி, வைஷ்யா கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி, ஏ.வி.எஸ். கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இந்த தேர்வை 10 ஆயிரத்து 262 பேர் எழுதுகின்றனர்.
முககவசம் கட்டாயம்
இதனிடையே தேர்வுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத வருபவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு தேர்வு மையங்களில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். மேலும் தேர்வு எழுத வருபவர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.
மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.