கரூர்
தொழிலதிபர் வீட்டில் 102 பவுன் நகைகள் கொள்ளை
|கரூரில் தொழிலதிபர் வீட்டில் 102 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 60). தொழிலதிபரான இவர் ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாண்டியன் தனது குடும்பத்துடன் கடந்த 11-ந் தேதி இரவு சென்னை சென்றுள்ளார். மீண்டும் நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவிலிருந்த 102 பவுன் நகைகள் கொள்ளைபோய் இருப்பது தெரிந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன், இதுகுறித்து கரூர் டவுன் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்நிலையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.