காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 102 பேர் கைது
|காஞ்சீபுரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி முன்னான் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கிய தீர்ப்பை கண்டித்தும், எம்.பி பகுதியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் காஞ்சீபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் பெரிய காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகம், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலைய நுழைவுவாயிலில் 3 பிரிவுகளாக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்களை கைது செய்வதற்காக அரசு பஸ்களும் போலீஸ் துறை வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஜவஹர்லால் வீதி பகுதியில் இருந்து காஞ்சீபுரம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் மற்றும் காஞ்சீபுரம் மாநகராட்சியின் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் தலைமையில், காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் தலைவர் நாதன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், காஞ்சீபுரம் யோகி என்கிற யோகாசனங்கள், எஸ்.எஸ்.டி. பிரிவு தலைவர் தங்கராஜ் உள்பட திரளானோர் பேரணியாக காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தை நோக்கி சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 102 காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதன் காரணமாக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.