கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
|கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றம் திட்டம் சார்பில் 1,008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
கன்னியாகுமரி:
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1,008 திருவிளக்கு பூஜைகள் மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம்.
அதனையொட்டி நடப்பு ஆண்டு வைகாசி முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று (22-ம் தேதி) கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் 50-வது ஆண்டு பொன்விழாவை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றம் திட்டம் சார்பில் 1,008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கன்னியாகுமரி சன்னதி தெரு வழியாக பகவதி அம்மன் கோவிலில் வந்தடைந்தார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 5.30 மணிக்கு பஜனையும் அதனைத் தொடர்ந்து 6.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.