ரூ.1,000 கொடுக்க 1,008 நிபந்தனைகள் விதிப்பதா? முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
|ரூ.1,000 கொடுக்க 1,008 நிபந்தனைகள் விதிப்பதா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீர்மான குழு கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தீர்மான குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், செம்மலை மற்றும் மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வசந்த மாளிகை
அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்ற இருக்கும் தீர்மானங்கள் குறித்து விவாதித்தோம். தி.மு.க. ஆட்சியின் அவல நிலை, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலை இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தீர்மானமாக நிறைவேற்ற இருக்கிறோம். வருமான வரி கட்டுவதால் நீதிமன்ற காவலில் இருக்கும்போது செந்தில் பாலாஜிக்கு முதல்வகுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. முதல் வகுப்புக்குரிய சலுகைகள் மட்டும்தான் கொடுக்கப்பட வேண்டும்.
பத்திரிகை செய்தியின் அடிப்படையில் கூறுகிறேன். சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியின் அருகே இருக்கும் அறையை இடித்து எல்லா வசதிகளுடன் வசந்த மாளிகை போல உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜியை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் என்ன?.
ரூ.1,000 கொடுக்க 1,008 நிபந்தனைகள்
1986-ம் ஆண்டு தலைவர் (எம்.ஜி.ஆர்.) உடல்நலம் குன்றியிருந்தபோதும் கூட 12 பேரை அமைச்சரவையில் இருந்து விடுவித்தார். தவறு செய்த அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்தவர் ஜெயலலிதா. ரூ.1,000 கொடுக்க 1,008 நிபந்தனைகள் விதித்த அரசு தி.மு.க. அரசாகத்தான் இருக்கும். தி.மு.க. உறுப்பினர் அட்டை வைத்திருந்தால்தான் ரூ.1,000 என்கிறார்கள். ஒன்றிய, மாவட்ட, வட்ட செயலாளர்கள் அடையாளம் காட்டுபவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும். தகுதி இருந்து ரூ.1,000 பெற முடியாதவர்கள், தங்களது கோபத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டுவார்கள்.
அமலாக்கத்துறை வளையத்துக்குள்...
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் உலக தலைவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். அந்த குற்றத்தை செய்தவருக்கு காலம் தாழ்த்தாமல் மரண தண்டனை உடனடியாக வாங்கி கொடுக்க வேண்டும். பெரிய அளவில் ஊழல் நடந்து கோடிக்கணக்கில் அதிபதிகளாக இருக்கும் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்முடி வழக்கில் 1 சதவீதம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 99 சதவீதம் பறிமுதல் செய்யவேண்டியது உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொருவராக அமலாக்கத்துறை வளையத்துக்குள் சிக்கி இருக்கிறார்கள்.
கண்டிப்பாக அவர்கள் மாட்டுவார்கள். கருணாநிதி ஆட்சி காலத்தில் கர்நாடகத்தில் கட்டப்பட்ட அணைகளால்தான் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் வறண்ட பாலைவனமாக மாறி வருகிறது. தண்ணீர் இல்லாத நிலை தமிழகத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாத மு.க.ஸ்டாலின், இந்தியா பேராபத்தில் இருப்பதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்த கதை தான் மு.க.ஸ்டாலின் கதை.
இவ்வாறு அவர் கூறினார்.