< Back
மாநில செய்திகள்
நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் 1,000 விதை பந்துகள் வீசப்பட்டன
நீலகிரி
மாநில செய்திகள்

நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் 1,000 விதை பந்துகள் வீசப்பட்டன

தினத்தந்தி
|
23 May 2022 9:18 PM IST

கூடலூர்,

நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் 1,000 விதைப்பந்துகளை கல்லூரி மாணவர்களுடன் இணைந்து வனத்துறையினர் வீசினர்.

காட்டு யானைகள்

கூடலூர் வன கோட்டத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. காட்டு யானைகள் உணவு உள்ளிட்ட தேவையை பூர்த்தி செய்வதற்காக கூடலூர், முதுமலை, மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வரை இடம்பெயர்ந்து செல்கிறது. அவ்வாறு அதன் வழித்தடங்களில் செல்லும்போது போதிய உணவு கிடைக்காத சமயத்தில் விவசாய பயிர்களை தேடி ஊருக்குள் வந்து விடுகிறது.

இந்தநிலையில் கூடலூர் அருகே நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் ஆங்கிலேயர் கால தங்க சுரங்கங்கள் உள்ளது. இங்கு அத்துமீறி சிலர் தங்கத் துகள்கள் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆபத்தான பள்ளங்கள் கொண்ட வனப்பகுதியாக மாறி வருகிறது. இதில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் தவறி விழுந்து உயிரிழந்து வருகின்றன. .

விதைப்பந்துகள் வீசினர்

வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்கவும், ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் இருக்கவும் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனப்பணியாளர்கள், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து சுமார் 1,000 மூங்கில் விதை பந்துகளை வீசினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

தங்கசுரங்க குழிகளால் பாதிப்படைந்த வனப்பகுதி பசுமை நிலைக்கு திரும்பவும், காட்டு யானைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கும், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கவும் மொத்தம் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான மூங்கில் விதை பந்துகள் வீச முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1,000 விதை பந்துகள் வீசப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் எதிர்காலத்தில் மூங்கில் காடுகள் பெருகி விடும். மேலும் காட்டு யானைகளும் ஊருக்குள் வராது. இவ்வாறு அவர்கள் கூறினர். கல்லூரி மாணவர்களுடன் இணைந்து வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்