< Back
மாநில செய்திகள்
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் - ராஜேஷ்குமார் எம்.பி.
நாமக்கல்
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் - ராஜேஷ்குமார் எம்.பி.

தினத்தந்தி
|
22 Nov 2022 12:29 AM IST

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என கொடியேற்று விழாவில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் தோப்புக்காடு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99 பிறந்த நாளையொட்டி தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவுக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான துரைசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஜெய சூர்யா சின்னதுரை, தோப்புக்காடு கிளைச் செயலாளர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். கல்வெட்டை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. விழாவில் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி. பேசியதாவது:- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 1 ½ வருடத்தில் பெண்களுக்கு இலவச பஸ் வசதி உள்பட பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. தற்போது பெண்கள் ஆட்சி நடந்து வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்து கல்லூரி, பாலிடெக்னிக், நர்சிங் போன்ற படிப்புகள் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:- ராசிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை கொண்டு வரப்படும். போதமலைக்கு சாலை வசதி செய்து தந்தவுடன் சுற்றுலா தலம் ஏற்படுத்தப்படும். நாமகிரிப்பேட்டை பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் டைட்டல் பார்க் வர உள்ளது. ராசிபுரம் நகரில் 60, 70 சதவீத சாலைகள் போடப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான கழிப்பிடம் சாலை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் நாராயணசாமி. அவைத்தலைவர் நல்லதம்பி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், சோமநாதன், செல்வராஜ், நைனாமலை, சந்திரமோகன், புதுப்பாளையம் ஊராட்சி கிளைச் செயலாளர், தோப்புக்காடு கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்