கன்னியாகுமரி
புதுமைப்பெண்கள் திட்டத்தில் 3,168 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000
|குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3168 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3168 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுவதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3168 மாணவிகள் பயன்
குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 1981 மாணவிகளுக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் பயிலும் 1187 மாணவிகள் என மொத்தம் 3168 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளியில் கல்வி உரிமையின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
சொந்தக்காலில் நிற்க...
இந்த திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவக்கல்வியில் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இந்த திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi,tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழ் போன்ற ஆவண நகல்களை கொண்டு மாணவிகள் தாங்களாகவே தங்களது செல்போன் அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தினால் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பு பெற்று, பொருளாதாரத்தில் சுதந்திரமாக, சொந்தக்காலில் நிற்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.