செங்கல்பட்டு
ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்
|ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வேளாண்மை என்ஜினீயரிங் துறை மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து கொடுக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு மின், சூரிய சக்தி மூலம் நீர் இறைக்கும் அமைப்பு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் உருவாக்கப்பட்டபின், பாசன நீர் வினியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு நிறுவும் பணிகள் பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசன திட்டம் ஒரு துளி நீரில் அதிக பயிர் நுண்ணீர் பாசன திட்டம் வேளாண்மை, தோட்டக்கலைத் துறையினரால் ஏற்படுத்தப்படும்.
வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழின் அடிப்படையில் இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இந்த திட்டத்திற்காக இதுவரை விவசாயிகளை கண்டறியப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரிய விவசாயிகளை போல, சிறு மற்றும் குறு ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில், பாசன அமைப்புகளை உருவாக்கி நிலத்தில் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை என்ஜினீயரிங் துறை அலுவலகத்தை அணுகலாம்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
செயற்பொறியாளர் (வே.பொ.)
487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35.
2) உதவி செயற்பொறியாளர் (வே.பொ.),
வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், அய்யனார் கோவில் பஸ் நிலையம், மதுராந்தகம் (இருப்பு) சிலாவட்டம், மதுராந்தகம் 603 306. செல்போன் எண்:94440 73322
உதவி செயற்பொறியாளர் (வே.பொ.),
487, அண்ணா சாலை, 'நந்தனம், சென்னை-35. செல்போன் எண்:94443 18854.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.