< Back
மாநில செய்திகள்
சிந்தாதிரிப்பேட்டையில் 100 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் - விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமா? அதிகாரிகள் விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் 100 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் - விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமா? அதிகாரிகள் விசாரணை

தினத்தந்தி
|
24 Nov 2022 9:58 AM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 100 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் ஒரு வாகனத்தில் மூட்டையில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜா மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 100 கிலோ அளவில் மாட்டிறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கால்நடைத்துறை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அந்த மாட்டிறைச்சியை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் அந்த மாட்டிறைச்சி கெட்டுப்போயிருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்த மாட்டிறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. பின்னர் அவற்றை கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.இந்த மாட்டிறைச்சி விற்பனைக்கு கொண்டு செல்ல வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து துறை ரீதியான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ''கெட்டுப்போன மாட்டிறைச்சியை வாகனத்தில் யார் கொண்டு வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுபோன்ற கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். பொதுமக்களும் இறைச்சி வாங்கும்போது தரமான இறைச்சியா? என உறுதி செய்து வாங்கிட வேண்டும். ஒருவேளை இறைச்சி விற்பனை நிலையங்களில் அதன் தரம் குறித்து சந்தேகமோ அல்லது தரமற்ற இறைச்சி விற்பனை செய்வது தெரிந்தாலோ 9444042322 என்ற உணவு பாதுகாப்புத்துறை எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்'' என்றனர்.

மேலும் செய்திகள்