தமிழகத்துக்கு கடல் வழியாக 100 கிலோ தங்கம் கடத்தல் - மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தகவல்
|தமிழகத்துக்கு கடல் வழியாக 100 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டை பகுதிகளில் கடத்தல் தங்கம் விற்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு அருகே 11.794 கிலோ தங்கம் பிடிபட்டது.
தங்கம் உருக்கும் கடையில் இருந்து 3.3 கிலோ தங்கமும் திருச்சியில் இருந்து சென்னை வந்த காரில் 7.55 கிலோ தங்கமும் சிக்கியது. கடந்த 11-ந் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் 2.97 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்டு மீன்பிடி படகுகள் வழியாக தமிழகத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நகைக்கடையில் நடந்த சோதனையில் ரூ.1.50 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஓராண்டாக விமானம் மற்றும் கடல் வழியாக 120 கிலோவுக்கும் அதிகமான தங்கம், கோடிக்கணக்கில் ஹவாலா பணம் சிக்கியுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.