திருவண்ணாமலை
100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தகத் திருவிழா -பொதுப்பணித்துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
|100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் புத்தகத் திருவிழா திருவண்ணாமலை பழைய பைபாஸ் சாலையில் உள்ள காந்தி நகர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இன்று (சனிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை என 11 நாட்கள் நடைபெறவிருந்த புத்தக திருவிழா தேதி மாற்றம் செய்யப்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் 100 புத்தகக்கடைகளுடன் கூடிய புத்தக அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த புத்தகத்திருவிழாவினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்து பேசுகிறார். பொது நூலகத் இயக்குனர் இளம்பகவத் திட்ட விளக்க உரை ஆற்றுகிறார். விழாவில் எம்.பி.க்கள் சி.என். அண்ணாதுரை, எம்.கே.விஷ்ணுபிரசாத், மற்றும் எம்.எல்ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகின்றனர்.
புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு தினமும் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், அரசு துறை அரங்குகள் என தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. புத்தகக்கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.