விருதுநகர்
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் ஊதியம்
|100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்தியமந்திரிக்கு மாணிக்கம்தாகூா் எம்.பி. கடிதம் அனுப்பினார்.
மாணிக்கம்தாகூா் எம்.பி. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்ததோடு பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளையும் கேட்டறிந்தேன். பல்வேறு பகுதிகளில் 100 நாட்களுக்கு குறைவாகவே வேலை அளிப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் 9 வாரங்களாக ஊதிய பட்டுவாடா வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கமே கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பாட்டு அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ. 83 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும் நிலையில் தற்போது ரூ.69 ஆயிரம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதி ஆண்டில் ரூ. 17 ஆயிரம் கோடி நிலுவை உள்ள நிலையில் திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக ஊதிய பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கடந்த 9 வாரங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திட்டத்தின் கீழ் தாமதம் இல்லாமல் ஊதிய பட்டுவாடா செய்ய வேண்டியது சட்டபூர்வ கடமை மட்டுமல்லாது பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய தார்மீக கடமையுமாகும்.எனவே பயனாளிகளுக்கு ஊதிய பட்டுவாடா செய்வதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுகிறேன். இந்த பிரச்சினையில் தங்கள் உடனடி கவனம் செலுத்துவது இந்த ஏழை குடும்பங்களில் நிதிச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் பண்டிகை காலத்தில் அவர்களுக்கு நிவாரணமாக இருக்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.