< Back
மாநில செய்திகள்
ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
திருப்பூர்
மாநில செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 9:10 PM IST

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோசடி

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). நிதி நிறுவன அதிபர். இவரை திருப்பூர் மாவட்டம் வேலப்பவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்்குமார் (51), பல்லடம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த பிரவீனா (41) மற்றும் திருப்பூரை சேர்ந்த தமிழரசன் ஆகியோர் தொடர்பு கொண்டு சொத்து பத்திரம் மூலம் கடன் பெற்று தொழில் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ெசாத்து பத்திரங்களை குமரேசன் அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இந்த சொத்து பத்திரங்களை ஈரோடு பகுதியில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து சிவக்குமார், பிரவீனா மற்றும் தமிழரசன் ஆகியோர் ரூ.2 கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால் வங்கியில் கடன் வாங்கிய பிறகு 3 பேரும் தொழில் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு குமரேசன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச்சொல்லி குமரேசனுக்கு நோட்டீஸ் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குமரேசன் வங்கியில் கடன் வாங்கிய சிவக்குமார், பிரவீனா ஆகியோரை தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் போலீசில் குமரேசன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், பிரவீனா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீண்டும் கைது

இதையடுத்து இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் நிபந்தனையை மீறியதால் சில மாதங்களுக்கு முன்பு பிரவீனா கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவக்குமார் திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியில் இதேபோன்று பத்திரங்களை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து சிவக்குமார் தலைமறைவானார்.

பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி அருகே சிவக்குமார் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சிவக்குமாரின் அண்ணன் விஜயகுமார், அவரது மகன் ராகுல் பாலாஜி, முன் ஜாமீன் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்