< Back
மாநில செய்திகள்
கடலூர் துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு சீரமைப்பு பணி நடைபெறவில்லை
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு சீரமைப்பு பணி நடைபெறவில்லை

தினத்தந்தி
|
17 May 2023 12:15 AM IST

ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி அளவில்தான் பணிகள் நடந்திருக்கும் என்றும், கடலூர் துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு சீரமைப்பு பணி நடைபெறவில்லை என்றும் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி. குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு டி.வி.ஆர்.எஸ். ரமேஷ் எம்.பி.தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான மதுபாலன் வரவேற்றார்.

கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண்துறை, பொது சுகாதாரத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், நிலஅளவை மற்றும்பதிவேடுகள் துறை, மகளிர் திட்டம், கனிம வளத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அந்த பணிகளின் தற்போதைய நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, உரிய அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

95 சதவீதம் பணிகள்

கடலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு நிதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. மீதியுள்ள 5 சதவீத பணிகளும் ஓரிரு மாதங்களில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர், எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

இந்த கூட்டத்தில் என்.எல்.சி. விவகாரம் பற்றி எதுவும் பேசவில்லை. இது மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி பணிகள் பற்றி தான் பேசினோம். மத்திய, மாநில அரசுகள் சார்பில் 44 திட்டங்கள் உள்ளது. இந்த திட்டங்கள் குறித்து தான் ஆய்வு செய்துள்ளோம். மாணவர்கள் இடைநின்றலை தடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலை நடக்கவில்லை

கடலூர் துறைமுகம் ரூ.100 கோடியில் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவுக்கு வேலை நடக்கவில்லை. அதனால் தான் இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து இருக்கிறேன். அதை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறேன். நான் சென்று ஆய்வு செய்த போது, ரூ.5 முதல் ரூ.10 கோடிக்கு தான் வேலை நடந்திருந்தது. மத்திய அரசு நிதி அது. இது பற்றி மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தில் பேசி நிதி வாங்கினேன். இந்த பணி குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் எம்.பி. கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் பேசிய அவர், கடலூர் துறைமுகம் சீரமைப்பு பணியில் முழுமையாக நிதியை செலவிடாமல், மத்திய அரசு நிதி விரையம் ஆக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் செய்திகள்