சென்னை
தனியார் நிறுவன பெண் ஊழியர்களை கத்தியால் வெட்டிய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
|தனியார் நிறுவன பெண் ஊழியர்களை கத்தியால் வெட்டிய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 34). இவர், மெழுகுவர்த்தி தயாரிக்கும் பயிற்சி பெறுவதற்காக சென்னை வேளச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.7 ஆயிரத்து 500 பணம் செலுத்தி உள்ளார்.
இந்தநிலையில் மெழுகுவர்த்தி நிறுவனத்துக்கு சென்ற யுவராஜ், பயிற்சிக்காக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த ஊழியர் வனிதா என்பவர், முதலாளி வந்ததும் பணத்தை திரும்ப கொடுத்து விடுவார் என கூறி உள்ளார்.
ஆனால், யுவராஜ் பணத்தை உடனே தர வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் யுவராஜ், அவரது நண்பர் பாலமுருகன் (41) ஆகியோர் வனிதா, மற்றொரு ஊழியரான ராஜேஸ்வரி ஆகியோரை கத்தியால் வெட்டினர். அதில், பலத்த காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினர்.
இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, யுவராஜ், பாலமுருகன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.