< Back
மாநில செய்திகள்
ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4 கோடி மோசடி: 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
மாநில செய்திகள்

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4 கோடி மோசடி: 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

தினத்தந்தி
|
13 July 2022 10:44 AM GMT

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை:

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜம்புகுமார் (வயது 52). இவர் நாமக்கல் டவுன் சேலம் சாலையில் எஸ்.ஆர்.ஓய். ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினர். இந்த நிறுவனத்தில் சம்பத், ஸ்ரீதர், திருப்பதி, முபாரக் பாஷா, மேகநாதன், இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோர் பணியாற்றினர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கில் லாபம் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தனர். இதனை நம்பிய 172 முதலீட்டாளர்கள் ரூ.4 கோடியே 24 லட்சத்து 4 ஆயிரத்து 70-ஐ இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், இவர்கள் உறுதி அளித்தபடி லாபம் வழங்காமல் மோசடி செய்துவிட்டு சென்றதாக புகார் எழுந்தது.

இந்த மோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் ஜம்புகுமார், சம்பத், ஸ்ரீதர், திருப்பதி, இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார்.

இந்த அபராதத்தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து அளிக்கவும் உத்தரவிட்டார். தீர்ப்பு கூறும் நாளில் கோர்ட்டில் ஆஜராகாத இனுக் ஆன்ட்ரூஸ்க்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முபாரக் பாஷா, மேகநாதன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததையடுத்து அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்