< Back
மாநில செய்திகள்
10 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்குகல்வி உதவித்தொகை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

10 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்குகல்வி உதவித்தொகை

தினத்தந்தி
|
22 March 2023 12:30 AM IST

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 10 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தபால் அலுவலக கணக்குடன் ஆதார்-செல்போன் எண்ணை இணைக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார்.

கல்வி உதவித்தொகை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், தபால் அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அதிக அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான 10 ஆயிரத்து 79 மாணவ-மாணவிகள் உள்ளனர். இவர்களில் 28 சதவீதம் பேருக்கு மட்டுமே தபால் அலுவலகத்தில் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஆதார், செல்போன் எண் ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிளஸ்-2 தேர்வு

இதனை 100 சதவீதம் நிறைவேற்ற தலைமை ஆசிரியர்கள், தபால் அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு காலதாமதம் இல்லாமல் உதவித்தொகை விரைவாக சென்று சேருவதற்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7½ சதவீத மருத்துவ இடம் ஒதுக்கீடு உள்பட அரசின் பல்வேறு திட்டங்களும் எளிதாக சென்றடைய வேண்டும்.

இதையொட்டி சாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்க வேண்டும். இதற்கிடையே பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் 10 சதவீத மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாமல் உள்ளனர். இவர்களை கண்டறிந்து இனிவரும் தேர்வை எழுத வைக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவ-மாணவிகளுக்கு சென்றடைய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விசாகன் பேசினார்.

மேலும் செய்திகள்