திண்டுக்கல்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 10 கடைகளுக்கு 'சீல்'
|திண்டுக்கல் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில், மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளை ஏலம் எடுத்த சிலர் கடந்த சில மாதங்களாக முறையாக வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.2¼ கோடி வரை வாடகை பாக்கி உள்ளது. இந்த நிலையில் வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளை பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாநகராட்சி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர், திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் வாடகை பாக்கி செலுத்தாத கடைக்காரர்களிடம் உடனடியாக வாடகை பணத்தை செலுத்தும்படி அறிவுறுத்தினர். ஆனால் பணம் செலுத்த யாரும் முன்வராததால் பஸ் நிலையத்தில் உள்ள 10 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். இதைப்பார்த்த கடைக்காரர்களில் சிலர் வாடகை பாக்கியை பணமாகவும், காசோலைகளாகவும் செலுத்தினர். அந்த வகையில் நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.18 லட்சம் வாடகை பாக்கி வசூலானது. நாளையும் (திங்கட்கிழமை) வாடகை பாக்கி வசூலிக்கும் பணி தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.