அரியலூர்
2 வீடுகளில் 10¼ பவுன் நகைகள் திருட்டு
|2 வீடுகளில் 10¼ பவுன் நகைகள் திருட்டுபோனது.
செந்துறை:
நகைகள் திருட்டு
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலுவின் மனைவி சுதா(வயது 28). ராஜவேலு வெளிநாட்டில் உள்ளதால், சுதா தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மாதந்தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடி அமாவாசையையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாகனங்களில் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் மாடியில் இருந்த கதவுகள் மற்றும் அறைக்குள் இருந்த பீரோவின் கதவுகள் திறக்கப்பட்டு கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 9½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார், அங்கு விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
விவசாயி வீட்டில்...
இதேபோல் செந்துறை அருகே உள்ள தளவாய் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(40). இவர் வயலில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது தந்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக தனது மனைவி கவுசல்யாவை, அவரது சொந்த ஊரான பெண்ணாடம் பூவனூருக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டை பூட்டி விட்டு தனது தந்தையை அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்றிருந்தார்.
நேற்று காலை மகாதேவனின் தாய் கஸ்தூரி, அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த இரவு மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த முக்கால் பவுன் மோதிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.