< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை   திருடிய மர்மநபர்கள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய மர்மநபர்கள்

தினத்தந்தி
|
8 Jun 2022 5:12 PM IST

தூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 10 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்கள் தடயங்களை அழிப்பதற்காக அறைகளில் தண்ணீர் ஊற்றி கழுவிச்சென்றனர்.

ஒர்க்‌ஷாப் உரிமையாளர்

தூத்துக்குடி பாலதண்டாயுதநகரை சேர்ந்தவர் இசக்கி (வயது 50). இவர் மடத்தூர் அருகே வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தாளமுத்துநகரில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார்.

கொடை விழா முடிந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் குடும்பத்தினருடன் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

நகை திருட்டு

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இசக்கி குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் அவரது வீட்டு கதவை உடைத்து கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

தண்ணீர் ஊற்றி கழுவினர்

மேலும், பீரோவில் இருந்த நகைகளை திருடிய மர்மநபர்கள், பிரிட்ஜில் இருந்த தின்பண்டங்களை எடுத்து ருசித்து சாப்பிட்டு உள்ளனர். கைரேகைகளை அழிப்பதற்காக குடத்தில் இருந்த தண்ணீரை வீட்டின் அனைத்து அறைகளிலும் ஊற்றி கழுவி விட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்