10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: 12-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் -தமிழக அரசு அறிவிப்பு
|10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வருகிற 12-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.
சுப்ரீம் கோர்ட்டில்40 மனுக்கள் தாக்கல்
கடந்த 2019-ம் ஆண்டு இதற்காக 103-வது அரசியல் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அந்த சட்டம் அமலில் உள்ளது.
இந்த அரசியல் சட்டத்திருத்தம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி 'ஜன்ஹிட் அபியான்', 'யூத் பார் ஈக்குவாலிட்டி' ஆகிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இவர்களுடன் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., உள்ளிட்டோரும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதேபோல், மொத்தம் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியல் சட்ட அமர்வு
இந்த மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, எஸ்.ரவீந்திர பட், பேலா திரிவேதி ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 7 நாட்கள் பரபரப்பாக விவாதம் நடத்தியது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்தே மற்றும் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. ஆகியோர் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். மத்திய அரசு சார்பில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.
10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதிதள்ளிவைத்தனர். இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு நேற்று முன்தினம் 40 மனுக்கள் மீது 4 தனித்தனி தீர்ப்புகளை வழங்கியது.
இதில், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். மற்ற 3 நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர். எனவே, பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்று அரசியல் சட்ட அமர்வு உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு வெளியான நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்து அறிவித்து உள்ளார்.
தமிழக அரசு அறிக்கை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத்திருத்தம், கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 7-ந்தேதி அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக்கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபை அனைத்து கட்சித்தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதற்கு ஏதுவாக, வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணியளவில், தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டசபை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள்
இப்பொருள் குறித்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டசபை கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.