கரூர்
நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைப்பு
|வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களது சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நிதி நிறுவனம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இயங்கி வந்த சிவபார்வதி பைனான்சியர்ஸ், ஸ்ரீ கீதாஞ்சலி ஆட்டோ பைனான்சியர்ஸ், எஸ்.ஜி.பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்களை வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார், விவேக், குணசேகரன், தங்கராசு, பூமதி, முருகன், சுரேஷ், பெரியசாமி, கந்தசாமி, வளர்மதி, தேன்மொழி, சதீஸ்வரன், கனகராஜ், சுரேஷ், கவுதமன், செல்வராஜ், பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து நடத்தி வந்தனர்.
இதில் முதலீடு செய்தால் முதலீடு செய்த தொகைக்கு அதிக வட்டி தருவதாகவும், முதலீடு செய்த தொகையினை முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்துடன் திருப்பி தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி பொதுமக்களை நம்பவைத்து பொதுமக்களிடம் முதலீட்டை பெற்றுள்ளனர்.
10 பேர் கைது
இதனை நம்பி புஞ்சை புகழூர் வடிவேல் கவுண்டர் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்கிற செல்வம் என்பவர் ரூ.1 கோடியே 28 லட்சம் முதலீடு செய்ததாகவும், முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து செல்வராஜ் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன் பேரில் கடந்த 30-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வமலர் விசாரணை மேற்கொண்டு, இந்த நிதி நிறுவன பங்குதாரர்களான விஜயகுமார், குணசேகரன் உள்பட 10 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நிதி நிறுவன பங்குதாரர்கள் 10 பேரையும் மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புகார் தெரிவிக்கலாம்
மேலும் நிதி நிறுவனம் இயங்கி வந்த அலுவலகத்திலும், பங்குதாரர்களின் வீடுகளிலும் கடந்த 2 நாட்களாக தனிப்படையினரை வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்த பணம் பரிமாற்றம் குறித்தும், அவர்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.