பெரம்பலூர்
டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 10 பேர் சிகிச்சை
|டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 10 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறது.
முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
சிகிச்சை
முகாமில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்படுவோரை டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலுக்கும், சாதாரண காய்ச்சலுக்கும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் டெங்கு காய்ச்சலுக்கு தற்போது 5 சிறுவர்கள் உள்பட 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.