ராமநாதபுரம்
மீனவர்களுக்கு 10 புதிய அறிவிப்புகள-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
|மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை உயர்வு உள்ளிட்ட 10 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பனைக்குளம்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராமநாதபுரம் சென்றார்.
அங்கு பேராவூரில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இரவில் ராமேசுவரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
அப்துல் கலாம்
நேற்று காலையில் அவர், அங்கிருந்து புறப்பட்டு பேய்க்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். கலாம் நினைவிடத்தில் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
கலாம் பற்றிய புகைப்படங்களை ஆர்வமாக பார்த்தார்.
மீனவர் நல மாநாடு
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் வந்தார். அங்கு தமிழக அரசு சார்பில் நடந்த மீனவர் நல மாநாடு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவுக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பந்தலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் கனிமொழி, நவாஸ்கனி, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
14 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்கள்
மாநாட்டில் 14 ஆயிரம் பேருக்கு 88 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் 10 அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-
1,076 கிலோ மீட்டருக்கு மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. நமது கப்பல்கள் பல்வேறு உலக நாடுகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சென்றிருப்பதை தாலமியின் நிலவியல் கையேடு சொல்கிறது.
கட்டுமரம், நாவாய், தோணி, வத்தை, வள்ளம், மிதவை, ஓடம், தெப்பம், டிங்கி, பட்டுவா, வங்கம், அம்பி, திமில் என்று வகை, வகையாக கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள்.
நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்து கடல்களிலும் தமிழர்கள் கலம் செலுத்தி இருக்கிறார்கள். உலகப்பயணிகள் எல்லோரும் தமிழ்நாட்டு கடலோரத்தை நோக்கி வந்தார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல்தான். அது ஆழமானது மட்டுமல்ல, வளமானது.
5-வது பெரிய மாநிலம்
மீன்பிடி தொழிலில் இந்தியாவில் 5-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்கள் பங்களிக்கிறார்கள்.
"கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால்..." என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் மட்டுமல்ல, கடலோரத்தில் வாழும் தமிழனின் கண்ணீராலும்தான் உப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்துதான், தி.மு.க. அரசு தனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான திட்டங்களை மீனவர்களுக்கு தீட்டி வந்திருக்கிறது.
மீனவர் நல வாரியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் போன்றவை கருணாநிதி ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.. இதே போல் கடந்த 2 ஆண்டு காலத்திலும் ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம்.
இந்த மீனவர்கள் நல மாநாட்டிலும் உங்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
ரூ.8 ஆயிரமாக உயர்வு
1. மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கப்படும்.
2. 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக்கடன் வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அறிவிப்பு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன முக்கியமான அறிவிப்பு. இதனை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள்.
மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரண தொகை வழங்கப்படும்.
40 சதவீத மானியம்
4. நாட்டுப்படகு மீனவர்கள் ஆயிரம் பேருக்கு, 40 சதவீத மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படும்.
5. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்எண்ணெய் அளவானது 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
6. மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.
தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம்
7. தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தும் ஆய்வுப்பணிகளையும் தொடங்கி இருக்கிறோம். பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளையும் தொடங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
8. மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
வீட்டு வசதி திட்டம்
9. மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
10. பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது. இது குறித்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற காரணத்தினால் இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. எனவே இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம்.
2.77 லட்சம் மீனவர்கள்
இதுவரை நான் சொன்ன அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். அதற்காக, மொத்தம் ரூ.926 கோடியே 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்போகிறோம். ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறோம். இந்த அறிவிப்புகள் எல்லாம் மீனவர்களுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட இருக்கிறது.
மீனவர்களின் இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும். ஏனென்றால், எல்லோரும் சொன்னதுபோல இது என்னுடைய அரசு மட்டுமல்ல; இது உங்களுடைய அரசு. உங்களுக்காக நடைபெறக்கூடிய அரசு. எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மீனவர் மாநாட்டை தொடர்ந்து அங்கிருந்து காரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்து, பின்னர் விமானத்தில் சென்னை திரும்பினார்.
-----