10 மாவட்டங்களில் புயல், வெள்ளம் பாதிப்பு - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
|தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.
சென்னை,
சமீபத்தில் மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களை புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.