< Back
மாநில செய்திகள்
நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை முறையில் அமல்: கோயம்பேடு-வடபழனி 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை
மாநில செய்திகள்

நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை முறையில் அமல்: கோயம்பேடு-வடபழனி 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
22 July 2022 11:13 AM IST

சென்னை கோயம்பேடு- வடபழனி 100 அடி சாலையில் நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

100 அடி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளதால், போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு நாளை(சனிக்கிழமை) முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

* கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மைய தடுப்புசுவர் மூடப்படும். இதற்கு மாற்றாக, ஏற்கனவே உள்ள செப் கேம் வில்லேஜ் சந்திப்பு, வடபழனி பாலத்தின் கீழ் ஆகிய 2 'யு டர்னில்' போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

* விநாயகபுரம் சந்திப்புக்கும், பெரியார் பாதை சந்திப்புக்கும் இடையே அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையே 'யு டர்ன்' உருவாக்கப்பட்டுள்ளது.

* பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் 'யு டர்ன்' உருவாக்கப்பட்டுள்ளது.

*வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதியதாக அமைந்துள்ள 'யு டர்னில்' திருப்பி செல்லலாம்.

* வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார்பாதை சந்திப்பில் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள 'யு டர்னில்' திரும்பிக்கொள்ளலாம்.

* விநாயகபுரம் சந்திப்பில் எம்.எம்.டி.ஏ. காலனி வலதுபுறம் திரும்பிச்செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள செப் கேம் வில்லேஜ் சந்திப்பு 'யு டர்னில்' திரும்பிச் செல்லலாம்.

* கோயம்பேடு திசையில் இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பை தாண்டி 243 மீட்டர் தொலைவில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'யு டர்னில்' திரும்பி விநாயகபுரம் நோக்கிச் செல்லலாம்.

* பெரியார் சந்திப்பு மூடப்படுவதால் பெரியார் பாதையின் உள் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி செல்லவும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் 240 மீட்டர் தொலைவில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'யு டர்னில்' திரும்பிச் செல்லலாம்.

* கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் 199 மீட்டர் தூரம் சென்று 'யு டர்ன்' எடுத்து செல்லலாம்

* நெற்குன்றம் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி வடபழனி பாலத்தின் கீழ் உள்ள 'யு டர்னில்' திரும்பி செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் 044-23452362, 42042300 ஆகிய தொலைபேசி எண்களிலும், Greater Chennai Traffic Police@ChennaiTraffic (டுவிட்டர்), Greater Chennai Traffic Police (இன்ஸ்டாகிராம்), Chennai Traffic@Traffic Chennai (பேஸ்-புக்) ஆகிய சமூக வலைத்தளங்கள் வழியாகவும் ஆலோசனைகளை வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்