சென்னை
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் 10-ந்தேதி கும்பாபிஷேகம் - தி.மு.க. அரசு பொறுப்பேற்று 1,000-வது நிகழ்ச்சி
|தி.மு.க. அரசு பொறுப்பேற்று 1,000-வது கும்பாபிஷேகம் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான கோவில்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 26 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் 400 ஆண்டுகளுக்கு பிறகும், காஞ்சீபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகும், ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கங்காதீஸ்வரர் கோவிலில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகும், நெல்லை மாவட்டம், அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சாமி கோவிலில் 123 ஆண்டுகளுக்கு பிறகும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், வெட்டுவானம், திரவுபதியம்மன் கோவில் 110 ஆண்டுகளுக்கு பிறகும், 5 கோவில்கள் 100 ஆண்டுகளுக்கு பிறகும், 6 கோவில்கள் 70 ஆண்டுகளுக்கு பிறகும், 15 கோவில்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகும், 15 கோவில்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.
1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் மேற்கொள்ள 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023- 2024-ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். அதன்படி 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023 - 2024-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவில்களிலும், தர்மபுர ஆதீனத்தை சேர்ந்த 27 கோவில்களில் 23 கோவில்களுக்கும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்திட அனுமதி அளிக்கப்பட்டு, கும்பாபிஷேகபணிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கும் 2,500 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் கும்பாபிஷேகம் மேற்கொள்வதற்கு 1,250 கிராமப்புற மற்றும் 1,250 ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகின்றது.
மாநில அளவிலான வல்லுனர் குழுவால் 7,142 கோவில்களில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 கோவில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000-வது கும்பாபிஷேகம் சென்னை மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1,000-வது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடக்க இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.