திருவள்ளூர்
பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க ரூ.10 கோடியில் திட்டம்
|பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க ரூ.10 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி கட்டுமான பணிகள் 1940-ம் தொடங்கப்பட்டு 1944-ல் முடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இதில் 2.750 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை பணிகள் நடந்தன.
தற்போது 3.231 தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. பருவ மழையின் போது ஏரி முழுவதுமாக நிரம்புவதால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றின் வழியாக வங்கக்கடலுக்கு திறக்கப்படுகிறது.
இவ்வாறு பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது. இதைக் கருத்தில் வைத்து பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க நீர்வளத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஏரியின் கொள்ளளவு மேலும் 0.74 டி.எம்.சி. உயர்த்தப்பட உள்ளது. இதற்காக ஏரியின் மதகுகளை பலப்படுத்தும் பணிகள் ரூ.10.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு பணிகள் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் பணிகள் தொடங்கபட உள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பங்களை நீர்வள துறையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் போது பூண்டி ஏரியில் 4 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.