சுற்றுலாத் தலங்களில் இயற்கை அழகை ரசிக்க ரூ.10 கோடியில் புதிய காட்சி முனைகள் - அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
|சுற்றுலாத் தலங்களில் இயற்கை அழகை ரசிக்க ரூ.10 கோடியில் புதிய காட்சி முனைகள் ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறை, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தனுஷ்கோடியில் ரூ.5 கோடியில் சுற்றுலா வசதி மேம்படுத்தப்படும். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.3 கோடியில் சுற்றுலா வசதி ஏற்படுத்தப்படும். கன்னியாகுமரியை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ரூ. 1 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் ரூ.4 கோடியில் சுற்றுலா வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
மதுரையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு அலகு 2-ல் ரூ.7 கோடியில் கூடுதல் விருந்து மண்டபங்கள் கட்டப்படும். சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும். கன்னியாகுமரியில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் ரூ.3 கோடியில் சுற்றுலா வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
சுற்றுலாத் தலங்களில் இயற்கை அழகை ரசிக்க ரூ.10 கோடியில் புதிய காட்சி முனைகள் ஏற்படுத்தப்படும். ராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் ரூ.7 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
உதகை ஏரி பகுதியில் ரூ.5 கோடியில் பார்வையாளர் மாடம், நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கப்படும். ரூ.2.8 கோடியில் திருப்பதி மற்றும் பிற சுற்றுலாக்களுக்காக 2 குளிர்சாதன பேருந்துகள் வாங்கப்படும். ஏற்காட்டில் உள்ள எமரால்டு ஏரியில் 3டி தொழில்நுட்பத்தில் நீர் சார்ந்த ஒலி, ஒளி காட்சி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.