சென்னை
சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்; ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
|சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.
அப்போது கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த நிசார் மண்டல் (வயது 27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு நடுவே பர்சு மற்றும் காலில் அணிந்து இருந்த காலணி ஆகியவற்றை பரிசோதித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.64 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 402 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் அணிந்து இருந்த உள்ளாடை, அவர்கள் கொண்டு வந்த உடைமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. 6 பேரிடம் இருந்து ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரள வாலிபர் உள்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த தமிமுல் அன்சாரி (30), சென்னையை சேர்ந்த நாகூர் மைதீன் (33) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் இருவரும் உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனா். 2 பேரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக தமிமுல் அன்சாரி, நாகூர் மைதீன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.