< Back
மாநில செய்திகள்
தொரடிப்பட்டு, கல்படை ஆறுகளின் குறுக்கே ரூ.10½ கோடியில் மேம்பாலம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தொரடிப்பட்டு, கல்படை ஆறுகளின் குறுக்கே ரூ.10½ கோடியில் மேம்பாலம்

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

தொரடிப்பட்டு, கல்படை ஆறுகளின் குறுக்கே ரூ.10½ கோடியில் மேம்பாலம் உதயசூரியன் எம்.எல்.ஏ. தகவல்

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் நடுதொரடிப்பட்டு கிராமத்தில் உள்ள மணலாற்றை கடந்துதான் சின்னதிருப்பதி, மேல்பாச்சேரி, தாழ்பச்சேரி, கருநெல்லி, கெடார், எருக்கம்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர முடியும். ஆனால் மழைக்காலங்களில் மணலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது ரூ.3½ கோடியில் புதிதாக மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர கல்வராயன்மலையில் முக்கிய ஆறுகளின் குறுக்கே உள்ள தரை பாலங்களை இடித்துவிட்டு புதிதாக மேம்பாலம் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பற்றி உதயசூரியன் எம்.எல்.ஏ. கூறும்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவுடன் கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் அதிகம் எதிர்பார்த்த தொரடிப்பட்டு மணலாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தில் ரூ.3½ கோடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மல்லிகைப்பாடி-கல்படை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4½ கோடி, நபார்டு திட்டத்தில் மட்டப்பட்டு ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட ரூ.2½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஆறுகளின் குறுக்கே மேம்பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்