வேலூர்
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு
|குடியாத்தத்தில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
குடியாத்தம் செதுக்கரை விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 61), முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று மதியம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து ரூ.1½ லட்சம் எடுத்து அதை தனது ஸ்கூட்டரில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு குடியாத்தம் காட்பாடி ரோடு நான்குமுனை சந்திப்பு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்ற அவர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று மருந்து வாங்கிக் கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றார்.
வீட்டிற்கு சென்றதும் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 1½ லட்சம் ரூபாயை காணவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவர் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் சென்று குடியாத்தம் காட்பாடி ரோடு 4 முனை சந்திப்பு பகுதியில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, குபேந்திரனை பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், அவர் மருந்து கடைக்கு சென்ற நேரத்தில் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.